Discover
Kadhaiya Kavithaiya
Kadhaiya Kavithaiya
Author: Kadhaiya Kavithaiya
Subscribed: 0Played: 1Subscribe
Share
© 0
Description
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
59 Episodes
Reverse
நீ என் நிலவோ? அடியே என் ரதியே!
இதமான குளிர் காற்று திடீரென்று!
வெக்கை தணிக்க யார் அனுப்பியது இங்கு?
சுருங்கிய கண்களை மெல்ல பிரிக்க
இருளின் நடுவினில் வென்மையாய் நீ!
சற்று பொறு! தனிமை விட்டு வருகிறேன்
கொஞ்சம் என்னை ஏற்றுக்கொள்!
சற்று பொறு! உன் விரல்கள் பிடிக்க வருகிறேன்
கொஞ்சும் என்னை கொஞ்சிக்கொள்!
விழி பார்த்து நான் திளைக்க
வீதியெல்லாம் நீ நகர
கட்டுண்ட கயிறு போல
நீ என்னை சுண்டி இழுக்க
நீரிலிட்ட படகாய் நானும் பின்னே வருகிறேன்!
சற்று பொறுத்தது எல்லாம் போதுமே!
பகல் எதும் இன்றியே நீயும் நானும் இனி
அன்றில் போல இணைந்தே
இரவின் வாசம் தேடி திரியலாம்!
என்ன சொல்கிறாய் என் நிலவே!
©Samcb
©Samcb
சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட அந்த traffic -ல்
முன்னின்ற அவளை முதன்முதலாக பார்க்கிறேன்
தேரில் வலம் வரும் ராணி போல
115 (நூத்தி பதினஞ்சு) cc ஸ்கூட்டரில் அவள் நின்றாள்
அத்தனை வேட்கையிலும் பனி மூடி வரும் குளிரினை உணர்ந்தேன்
அவள் துப்பட்டா என் மீது பட்ட நொடியில்
சூரியனின் வேட்கையை அவள் உணர்ந்தாளோ இல்லை
எந்தன் கண் பார்வை அவள் அறிந்தாலோ
ஒளித்து வைத்த அவள் முகத்தை
துப்பட்டா இருந்து வெளி கொண்டு வந்தாள்
இப்பொழுது எனக்கு ஜன்னியே வந்து விட்டது
அவள் அழகில் விழுந்து
சிவப்பிலையே நின்று விடாதா இந்த signal என்று
என் உள் மனம் தடுமாறியது
காற்றில் அவள் கூந்தல் திமிற
நானும் திமிறினேன் சட்டென்று
எத்தனையோ முறை இப்படி பலரை பார்த்தும்
ஒரு முறை கூட இப்படி நான் இருந்ததில்லை
இது என்னவென்று சொல்ல நானும்
முதல் காதலோ? இல்லை முடிவில்லா துவக்கமா?
பச்சை signal அங்கு போடும் முன்னமே
அவள் என் இதயத்தை பறித்துக்கொண்டாள்
நான் மட்டும் எப்படி செல்வேன் தனியாக
குளிரினில் உறைந்த நான்
மீண்டும் வேட்கையில் வெந்தே போவேன்
எல்லாம் இத்தனை என்னுளே நடந்து போக
அடிச்சான் பாரு ஒருத்தன் ஹார்ன்
cha... சிக்னல் போடவும் அவ பறந்து போறா...
நா பாவமா அவ பின்னாடி போனேன்
அடுத்த signal சீக்கரம் வராதா என்று...
ஒற்றை திரையில் வாழ்வின் அடித்தளம்!
சாதாரண கண்கள் காணும் அழகிய பக்கங்களின் வர்ணங்களை
அயராத இவர்கள் கண்கள் செதுக்கும்
கடினமாய் உழைத்திடும் நேரத்தை எல்லாம் குறைத்திட
நிரலாக்கம் செய்து ஒழுங்கு படுத்தும்
சந்தோசமாய் கழித்திடும் பொழுதுபோக்கு தளங்களுக்கும்
பின்னணியாய் இவர்கள் விரல்கள் இருக்கும்
மொழிகள் பல உலா வந்தாலும்
இவர்கள் மொழி தனி தான்
தட்டச்சு தட்டியே திரை மொத்தம் ஜொலித்து இருக்கும்
கண் பார்வை தாண்டியே தர்க்கங்கள் நிறைந்து ஒளிந்திருக்கும்
விடியும் பொழுதிலும் மூழ்கும் இரவிலும்
கணினி சூரியன் முன்னிருக்கும்
உடற்பயிற்சி செய்திடாத உடல் இருந்தும்
விரல்கள் வலுவாய் இருக்கும்
முகங்கள் யாருக்கும் தெரிந்திடாமல் போனாலும்
இவர்களின் முயற்சிகள் எங்கும் நிறைந்திருக்கும்
தொழில்நுட்பம் வளரும் ஒவ்வொரு அசைவிற்கும்
இந்த கலைஞர்களின் கைவண்ணம் ஆழம் இருக்கும்
ஆம், கண்முன்னே தோன்றிடினும்
இவர்கள் மறைக்கப்பட்டவர்களே திரைக்கு பின்னே...
கற்பனையில் பறந்த நாட்களை தான் ஒத்தி வைப்போம்
கனவினில் வின் சென்ற நிமிடங்களையும் தூரம் வைப்போம்
மனதில் ஆயிரம் வலிகள் இருப்பினும் மறைத்து வைப்போம்
இங்கு யாரோடு யார் சோகமும் பகிர்தல் என்பதே பொய் தான்
சில நேரம் கேளிக்கைகளுக்காக, சில நேரம் நம் கண்ணீர் கரைக்க மட்டுமே...
கேட்க காதுகள் இருப்பினும் நோக்கம் நேர்மை இருப்பினும்
சுமப்பது ஒரு மனது மட்டுமே
வழிகள் ஆயிரம் யாரும் சொல்லலாம்
கண் சிவந்து நீர் வற்றி போன பின்பு
மீண்டும் யோசித்து பாருங்கள்
உங்களுக்கு தேவையான வழி தானாக வரும்
ஒடிந்த சிறகுகள் மீண்டும் உயிர்பெறும்
ஓய்வில்லாமல் மீண்டும் படபடக்க தயாராகும்
கண்டம் தாண்டி செல்லும் பறவை போல
இளைப்பாற இடம் இல்லாது இருந்த மனமும்
நின்று உயிர் பெறும்
எல்லாம் நிதானம் வந்துத்தான் ஆக வேண்டும்
பட்டு போன மரம் இருந்து வரும் சிறு கிளை போல நம்பிக்கையும் வரும்
மனதோரம் செய்த சண்டைகள் முற்று புள்ளிகள் பெறும்
முகம் சற்று ஜொலிஜொலித்திடும்
கண்கள் சிவக்க வற்றிய கண் நீரும்
மெல்ல கண்களை கழுவ இயல்புக்கு திரும்பியிருக்கும்
ரசித்திடாத ஓசையும் காற்றின் கீதமும்
உதட்டோரம் புன்னகை பூக்க செய்திருக்கும்
நடுங்கிய கைகளும் சிறகுகள் போல திடம் பெற்றிருக்கும்
தடுமாறி நடந்த கால்களும் நிலையாக நின்றிருக்கும்
சில நொடி சிந்தித்து பார்க்கையில்
பலவற்றைத் தாண்டி வந்திருப்போம்
எதுவும் மறந்து மக்கி போகாது எனினும்
மெல்ல மெல்ல ஒரு ஓரம் ஒதுக்கி கடந்து வந்தே இருப்போம்
ஆசை கொண்ட மனதிற்கு நிராசை தான் பரிசு
அறிந்தும் அடுத்த ஆசை கொள்வோம்
சிறகுகள் மீண்டும் ஒடிந்தால் தான் என்ன
மீண்டும் பறக்கலாம் சிறகுகளே இல்லாமல்...
எந்த ஒரு நீண்ட கால நட்பும்
ஏதோ சிறு புள்ளியில் தான் துவக்கம்
சந்திக்கும் எல்லா மனிதருளும்
இது பெரிதாய் தோன்றிடாது...
மெல்ல அது தோன்றி
பல யுகங்கள் வாழ்ந்த வாழ்வினை
ஒவ்வொரு நட்பும் பெற்றிருக்கும்
சந்தோசமோ கோபமோ
துக்கமோ கண்ணீரோ
பெரிதாய் வெளி உலகுக்கு தெரிந்திடாத அத்தனை ரகசியமும்
அவர்களுக்கு உருவாக்கப்பட்ட உலகில் பேசு பொருளாயிருக்கும்
முதல் காதல் தோன்றினாலும்
மூன்றாம் காதல் தோன்றினாலும்
அவர்களின் யோசனையும் இருக்கும்
அவர்களின் கேலிக் கிண்டல்களும் இருக்கும்
ஈருருளியில் மூவர் பயணித்தலும்
பேச வார்த்தைகளின்றியும் ஒன்றாய் நேரம் செலவிடுதலும்
நெடுந்தூர பயணத்தில் தேநீர் பருகுதலும்
இரவுநேர வசவுகளில் இருவரியில் வந்து செல்லுதலும்
இவர்களின் அன்றாட செய்கைகள்
சண்டைகள் சில நொடி தோன்றினாலும்
வெளிப்புறம் விட்டு கொடுத்துதல் இல்லை
ரத்தம் சொட்டும் அளவு விளையாடினாலும்
கோபங்கள் வருவதும் இல்லை
கால்கள் தலைமேல் பட்டாலும்
பின்னிப்பிணைந்த உறக்கம் கொண்டாட்டம் தான்
நல்லதோ கெட்டதோ
நண்பர்களிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு தான்
ஆயிரம் நண்பர்கள் இருப்பதாய் காட்டுபவர்களும்
தேர்ந்தெடுத்த குறுகிய வட்டம் கொண்டவர்கள் தான்
ஒன்றாய் இருப்பதால் அருமைகள் மறைக்கப்பட்டிருக்கலாம்
சிறு தூரம் சொல்லிவிடும்
அவர்களின் கலாய்சொற்களின் பின்னிருக்கும் அன்பினை...
நான் பார்த்த ஆண்மகனில்
எனை கவர்ந்த கள்வன் நீ...
முதலில் என் கண்களை பறிகொடுத்தேன்
பின்பு என்னையே இழந்தேன் உன்னிடம்
உன் கை பிடித்து நடக்கையில்
சிறு குழந்தை போல் ஆகிறேன்
உன் நிழல் விழும் பாதையில்
என் பாதை அமைக்கிறேன்
உன்னோடு நானிருக்கும் நொடிகள் அனைத்தும்
என் வாழ்வின் வரமென மாறிப்போகிறது
உன் மார்பில் நான் சாயும் நேரமெல்லாம்
எந்தன் கடிகாரம் தன்னிலை மறக்கிறது
பேசி பேசி மொழிகள் எல்லாம் வற்றி
பேசா நிலை வந்தும்
கண்கள் மட்டும் பேசாமல் பேசுகிறது
மொழி தேவையில்லை போல அவைகளுக்கு
ஈருருளி மீதேறி, காற்றின் ஓசை பரவ
என் மூச்சும் உன் கழுத்தில் தத்தி
திக்கி திக்கி கேட்டும் வார்த்தைகள் யாவையும்
ஒன்றாக இணைத்து பேசி செல்லும் பொழுதும்
உந்தன் தண்டுவட அதிர்வை என்னுள் கடத்துகிறாய்
ஆண் என கர்வம் கொள்ளாமல்
எந்தன் வார்த்தைகளுக்கு உரிமை தரும் பொழுதும்
எந்தன் கருத்துகளுக்கு செவி சாய்க்கும் பொழுதும்
இன்னும் ஆழம் செல்கிறாய் என் மனதுள்ளே
காலத்தின் நீட்சி தான் எத்தனை மாயம்
காதல் கசக்கும் என தூரம் இருந்த என்னை
கடைக்கண் பார்வை வீசி
இது தான் காதல் என்று சொல்லிவிட்டாய்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும்
புது புது அர்த்தங்கள் கற்று தந்து
என்னையே முழுதும் களவாடி விட்டாய்
உயிரும் உன்னோடு கலந்த பின்பு
உடல் இரண்டும் வெவ்வேறு திசை இருந்து பயன் என்ன?
நெற்றி முத்தம் பதித்து ஐவிரல் இணைத்து
உன் மார்போடு அணைத்துக்கொள்..
முழுதாய் நானும் உனதாகிறேன்...
தெருவெல்லாம் தேவதைகள் என்று
கண் விழும் மங்கைகள் யாவரையும்
கடைக்கண்ணால் ரசித்து விட்டு
கடந்திடும் சராசரி ஆடவன் நானடி
முதல் பார்வை முதல் காதல் என்று
சகாக்கள் சொல்ல கேட்டபோதிலும்
கேலி கிண்டல் செய்து விட்டு
காதல் போதை தெரியாத வயதுவந்த சிறுவன் நானடி
உடலென்ன மனம்மென்ன என்று
ஆராய்ச்சி ஏதும் செய்யாமல்
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அறியாமல்
கண்மூடித்தனமாய் சுற்றி திரியும் மன்னன் நானடி
எதேச்சையாய் என் கண்முன் தோன்றி
பார்த்த நொடியிலேயே எனை நீ சிறைபிடித்தாய்
மறுபடி மறுபடி உனை நான் பார்த்திட
எந்தன் அட்ரலினையும் சுரக்க செய்தாய்
இதற்கு காதல் என்றொரு பெயரை
நானும் வைத்து கொள்ள
உன் நாணம் நானும் பார்க்கையிலே
இறக்கை கட்டி மேகம் தொட பறக்கிறேன்
தடுமாறாமல் பேசும் நாவும்
என்னைப் போலவே உன்னிடம் தடுமாற
பழகிய வார்த்தைகளும் என் கை விரல் போல
நடுநடுங்கி தான் போனது உன் மையிட்ட கண்கள் பார்த்து
தனியாய் நடந்த என் பாதங்களும்
உன் அன்னநடையுடன் ஒத்திசைவு பெறுகிறது
நடுங்கும் என் விரல்களை நீ பற்றுகையிலே
இதயம் சில நொடி வலுவிழக்கிறது
காதல் இது தான் என்று
என் வாழ்வில் நான் ஏற்கும் முன்னமே
என்னோடு முழுதாய் நீ கலந்து
என் ஆசையிலும் என் ஆயுளிளும்
என் மூச்சிலும் என் பேச்சிலும்
என் நடையிலும் என் உணர்விலும்
பிரிக்க இயலாத அனிச்சை செயலாய்
மூளையில் பதிந்து விட்டாய்
சில நொடியில் நான் செய்த மூடத்தனத்தினால்
உன் ஆயுள் முழுதும் எனை நீ வெறுக்க
மீண்டும் உன்னோடு கைவிரல் கோர்ப்பது
நிதர்சனத்தில் சாத்தியமில்லா கூறுகள் என
நரம்பு திசுக்களால் ஆன இந்த மூளை கூப்பாடு போட்டாலும்
சில நேரம் என்னை சமாதானம் செய்ய
மாயத்தோற்றமும் தருகிறது நீ இல்லை என்பதை மறைக்க...
வா வா மழையே
என்னை தொட்டு தொட்டு போ மழையே
காரிருள் மேகம் விடுத்து புவியீர்ப்பு விசை பிடித்து
என் கன்னம் வருடு மழையே
வானத்தில் சுற்றி திரிந்து என் முகம் பார்த்த மட்டும்
சட்டென்று கிழே வந்து விடு மாமழையே
என் கண்களின் கண்ணீரும்
நீ வந்து விட்டால் மறைந்து கொள்ளும்
என் அடக்கிய சத்தம் மட்டும்
உன் முன்னால் கரைந்து போகும்
வா வா மழையே
என்னை கொஞ்சி கொஞ்சி போ மழையே
கைபேசி கையில் வைத்து
நிழல் தேடி ஓட மாட்டேன்
சேறு என ஆடை ஒதுக்கி
உன்னை தள்ளி போக மாட்டேன்
தோஷம் என்று சொல்லியும்
ஓரம் போய் ஒளிந்தே கொள்ளமாட்டேன்
கரம் இரண்டும் இறக்கையாய் விரித்து
என் மார்போடு உன்னை அனைத்து கொள்கிறேன்...
வா வா மழையே
என்னை கொஞ்சமாய் கொண்டு போ மழையே
அருகாமை மேகத்தோடு சண்டையிடு
இடியென சத்தம் எனக்கு கேட்கட்டும்
வானில் குளிர்ந்த நீ
என்னையும் கொஞ்சம் குளிர்விக்க வா
வானம்பாடி போல வானம் பார்த்து
வாசலோரம் வாஞ்சையோடு நிற்கிறேன்
வஞ்சிக்கொடி போல என்னை வந்து அனைத்துக்கொள்
வா வா மழையே...
இரு முறை அல்லது மூன்று முறை அவள் என் முகம் பார்த்திருப்பாள்
இருநூறு அல்லது அதற்கு மேலும் நான் அவள் முகம் பார்த்திருப்பேன்
அவள் அசையும் அங்கங்கள் யாவும் என் கண்களுக்கு அமிர்தமே...!
அவள் தட்டி ஒதுக்கும் கூந்தல் மயிரும்
மயிலிறகின் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது தான்...
அவள் மெல்ல சிமிட்டி சிமிட்டி பேசும் அழகும்
இடியோடு மின்னல் வந்து தாக்கும் உணர்வு தான்
அவள் ஈர உதடு ஒட்டி பிரியும் நொடியும்
நெஞ்சம் இங்கே வெளி வர துடிக்கும் நொடியும் ஒன்று தான்...
முகத்திலே இத்தனை ஆசைகள் உன் மீது வைத்தாலும்
மெல்ல நீ நடக்கையில் அங்கம் அசையும் அழகும்
மெல்ல மெல்ல என் புலன் சார்ந்த ஆசையும் தட்டி தான் செல்கிறது
கழுத்தணி முடியும் இடமும் அங்கு நீ ஒளித்து வைத்த அங்கமும்
இங்ஙனம் என் ரேகை அழித்திட தானா?
தூரம் இருந்து ரசித்த அவள்
அருகினில் வந்த பின்பு ரசிக்காமல் இருப்பது பாவம் இல்லையா?
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு அசைவையும்...
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு பரிவையும்...
ரசித்தேன்., அவள் ஒவ்வொரு ஆசையையும்...
கண்ணோடு கண் நோக்கின் காதல் ...
கழுத்தோடு கண் நோக்கின் காமம் ...
இங்கோ எனக்கு காமம் எல்லாம் கடந்த பின்பும்
காதல் உன் உடலின் மீதா? இல்லை உணர்வின் மீதா?
அங்கத்தில் ஆரம்பித்த காதல்
உன் குரல் கேட்டு ரசித்து பெருகிய காதல்
உன் விரல் தொட்டு கிளர்ச்சி அடைந்த காதல்
உன் மனம் அறிந்து, அங்கம் மறந்த காதல்
உன் ஸ்பரிசம் மறந்து உன்னில் திளைத்திருக்க செய்த காதல்
ஊடல் முடிந்தும் உன்னோடே வைத்திருக்கிறது
இதில் காதல் முடிந்து காமமா
காமம் முடிந்து காதலா!?
இரண்டும் ஒன்று தான் எண்ணில் நீ வினாவையிலே...
ஊடலும் நன்று தான் காதலும் நன்று தான்
இரண்டும் ஒருவளின் மேல் வருவதென்றால்
அந்த ஒருவள் அவள் மட்டும் தான்...
கரம் பற்றுவாய் என உன்னை நம்பி
என் மனம் நானும் விரும்பி தொலைத்தேன்
என் ஆசை யாவும் ஏற்று
உன் தோளில் எனை சுமப்பாய் என நம்பி இருந்தேன்
தித்திக்கும் இனிப்போடு திகட்டாத காதலோடு
நித்தம் நித்தம் நேரத்தை தான் சீண்டி பார்த்தோம்
வாய்மொழி வார்த்தையன்றி குறுந்செய்தி சேவையும்
பெரும் சேவை தான் செய்தது நம் வார்த்தைகள் சுமந்து
உன்னில் பிடித்தவை எனதாகியும்
என்னில் பிடித்தவை உனதாகியும்
உணர்வில் அது கலந்து
மதி மயங்கியே வைத்திருந்தது
காலம் ஒரு அரக்கன் போல
பேசும் மொழிகளும் அவன் விரலசைவினிலோ?
பிடித்தவற்றை விரும்பி ரசித்து செய்த நாட்கள் கரைந்து
விரும்பிவிட்டாய், செய்தே ஆக வேண்டும் என்று வந்து நிற்கும் நாளினை
நானும் எதிர்பார்க்கவில்லை
இதுவரை ரசித்த செயல்களும்
அந்த ரசனையில் மயங்கி., பார்த்தும் சொல்ல தைரியம் இல்லா விசயங்களும்
மெல்ல மெல்ல வேரூன்றி வார்த்தையாய் வெளிவந்தது
முதலில் அன்பாக... மெல்ல அது கட்டளையாக
முடியாது என்று சொற்கள் பரவ
சிறு சிறு ஏக்கங்கள்...
பின் அதுவே மெல்ல கோபமாக மாறி வர.,
நாட்கள் நகர நகர மூர்க்கமாய் மாறுவது ஏனோ?
இனிமையாய் ஆரம்பித்த நாட்களில்
சிறு சிறு கசப்பும் புளிப்பும் சகஜம் தான்
வெயிலும் குளிரும் இனிமை தான் அளவோடு இருக்கும் வரை
எவ்வளவு தான் தாங்கும் இந்த சுருள் கம்பியும் இந்த அழுத்தத்தை
தினம் தினம் அழுது சிவந்த கண்களுக்கு
காலையில் மையிட்டு மறைக்கும் நாடகம் போதும்
எதிர் எதிர் பாதை கொண்டு
ஒரு தடத்தில் பயணிப்பதிலும் அர்த்தம் இல்லை
போதும் இந்த வலிகள் வேதனைகள்...
வழி மட்டும் விட்டு விடு
மீண்டும் உன்னை பார்க்கும் வேளையில்
புன்முறுவல் செய்யும் வாய்ப்பாவது இருக்கட்டும்
மீண்டும் அழுது, மீண்டு மீண்டு நானும் வாழ்வது
நாணல் போல் நதியோரம் நீந்திடவே...
அருகினில் இருந்து கண்ணீரில் வாழ்வதை விட
தொலைவினில் சந்திப்போம்
சிறு புன்னகை பேசிப்போம்
காதலில் அன்பு மட்டும் நீடிக்கட்டும் சில காலம் கழிந்து கண்கள் சந்திக்கையில்...
உடலின் அசைவுகள் மெல்ல தளர்ந்து சாய
கண்கள் சொருகி காரிருள் சூழ
தேடிய நிம்மதி எட்டிடுமோ?
இல்லை பயமூட்டிய நினைவுகள்
கனவாய் வந்து சீண்டிடுமோ?
அனிச்சையாய் தேகம் நகர
கண்கள் மூடியும் மனம் சலனமாய் நோக
இருள் சூழ்ந்த அறையினுள்
கண்கள் திறவா நொடியிலும்
ஆயிரம் எண்ணங்கள் ஊடுருவ
தன்னிச்சையாய் செயல்படும் சுவாச பாதையும்
தன்னிலை மறந்து திணற
பதட்டத்தோடு சட்டென விழிப்பு...!
வரமா சாபமா இந்த இரவுகள்?
கண் திறந்து பார்த்து பதிந்த காட்சிகள் யாவும்
கண் மூடியும் கொல்லும் மாயம் என்ன?
தனியே நானும் என்றாலும், இவ்விருளிலும்
உடன் தெரியும் உருவம் மாயையா? இல்லை,
மதிக்கு எட்டாத மர்மமா?
நவரசம் என்பதில் சில ரசம் மறைந்து வர
அவற்றை கண்சாடைக்காக உருவாக்கும் மூளை
இந்த மனதை விட வலிமையானதா!?
இல்லை இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று கூட்டு களவானியா!?
சுழலும் காலச்சக்கரத்தின் வேகம்
இந்த முட்டாள் மூளையின் வேகத்தை விட அதிகம் போல...
ஒரு நாள் முழுதும் தொலைந்தே போகும், ஈடுசெய்ய முடியாமல்
அன்று சில வர்ணங்கள் உதிக்கும்
கலந்தாலோசிக்க சுற்றிலும் பல வார்த்தைகள் இருக்கும்
மையம் அமைதியாய் மறைந்திடும், மௌனமாயும்...
@samcb
நான் தனிமையில் செல்லும் நேரத்தில் என் முதல் நண்பன் நீ எனக்கு தென்றல் இயற்கையாய் தீண்டினாலும் நீ என்னை தாலாட்டும் அழகே தனி தான் சந்தோஷத்தில் உன்னை தேடிய நாட்களை விட துக்கத்தில் உனை தேடிய நாட்கள் அதிகம் சில இன்னிசையில் என்னையே மறக்க வைப்பாய் சில இன்னிசையில் அவளின் முகமாயும் நீ இருப்பாய் அவளும் நானும் சேர்ந்து ரசித்த அழகிய நிமிடம் இன்று உன்னோடு தனிமையில் கிடைத்தாலும் ஆனந்தம் பொங்கி வழிந்தாலும் சிறு கண்ணீரும் கலந்தே தான் கரைகிறது உன்னை என்ன குற்றம் சொல்ல ? பாத்தியப்பட்டவன் நானிருக்க நினைவெல்லாம் வருடும் அவள் கூந்தல் வாசம் உன்னாலே மீண்டும் அடைந்தேன் நிஜ கண்கள் தான் இந்த தனிமையில் இருளினை காண்கிறது மனக்கண்களோ உன்னோடு இணைந்து அவள் முகம் பார்க்கிறது தேடியும் கிடைக்காத பொக்கிஷம் அழகிய நினைவுகள் அப்பரிசின் அற்புத திறவுகோல் நீயே தான் நண்பனும் நீயே நம்பிக்கையும் நீயே கோபமும் நீயே குணமும் நீயே தனிமையில் என்னருகினில் நீ வரமே என்னோடு தனிமையை அனுபவித்திடு பகலினில் சிரிக்கும் நீயும் இரவினை விரும்பிடுவாய் - என் இன்னிசையே... என் இனிய இசையே...
Instagram: @kadhaiyakavithaiya
secret relationships - ரகசிய உறவுகள்:
காதல் செய்த இருவரும்
மறைத்து வைத்த பொக்கிசம்
ஊர் அறியா உலகு அறியா
இருவர் அறிந்த ரகசியம்
இரவுக்குள்ளே லட்சம் கனவுகள்
பகலினிலே சில வேசங்கள்
சமூக ஊடக வெளிச்சத்தில் தனிமை
தனிமையின் கைபேசி வெளிச்சத்தில் கரைந்திடும்
ஏன் இந்த ரகசியம்?
பிரிந்திடவா இல்லை இணைந்திடவா
போட்டு போட்டு வாங்கிய பதில்கள்
மொத்தமாய் தான் குவிகிறது
சிரித்து சிரித்து பேசிய முகமும்
நயவஞ்சகமாய் நஞ்சை நிறைக்கிறது
கூட்டத்தோடு கூட்டமாய் தான்
நித்தம் சுற்றி திரிகிறது
வெப்பம் தணிந்த வேளையிலே
யாரும் பார்க்கா வண்ணத்திலே
கண்ணாடி அறைக்குள் மெல்லமாய் சென்று
அறிந்த விசயம் அனைத்தையும்
வசமாய் தான் அரைக்கிறது
ஏன் இந்த ரகசியம்?
வன்மம் எனக்கொள்வதா இல்லை நிறுவன பற்று என்பதா
மூவரும் சுற்றாத இடம்
இனி வரும் காலத்தின் சாபம் போல
ஒரே அறையினுள் தங்கி
ஆடிய ஆட்டமும் கொஞ்சமில்லை
காலமும் நேரமும் கூட நகர்ந்தே தான் போகிறது
அவன் மட்டும் விலக்கா?
இருதுருவதில் அவர்களும் நடுவினில் நானும்
வித்தியாசமாய் தான் உணர்கிறேன்
வந்து போகும் சண்டைகளும் சகஜம் தான்
மீண்டும் இணையாத சண்டை இதை, என்ன செய்ய...
காரணமும் மறைத்து வைக்க
ஏன் இந்த ரகசியம்?
இருவருக்குள் கோபமா இல்லை இருவரின் கோபமா
இவளின் வருகையை அவளிடம் மறைக்கிறேன்
அவளின் கோபத்தை இவளிடம் மறைக்கிறேன்
அவர்கள் இருவரின் சந்திப்பும் தித்திப்பு தான்
தனித்தனியே என்னிடம் வருகையில் தான் கொடுமையே
கைபேசி அழைப்பில் சில நொடி தாமதம்
ஒருவள் சொல்கிறாள் - என்னடா உன் ஆளு கூட கடலையா...?
இன்னொருவளோ - என்ன விட உன் friend அவ தான் முக்கியம் ல...?
இருவரும் உறவு தான் உணர்வும் கூட
ஒரே பொய் தான்
தோழியிடமும் சரி காதலியிடமும் சரி
வேறு சில வேலைகள் என்று
ஏன் இந்த ரகசியம்?
ஆதி வந்த தோழிக்காகவா இல்லை இறுதி மூச்சு வரை வரும் காதலிக்காகவா
Written: Sam
Read: Satheesh
Instagram: @kadhaiyakavithaiya
பட்டாம்பூச்சி:
அழகான பட்டாம்பூச்சி, வரப்பு ஓரம் பறந்து தெரிந்ததாம்
எவ்வித கட்டுப்பாடும் இல்லை எவ்வித கலக்கமும் இல்லை
தன் வட்ட வாழ்க்கையில் தைரியமாய் தான் இருந்ததாம்
தெருவோரம் ஓடிச்சென்ற சிறுவன் ஏனோ வரப்பின் ஓரம் வந்தானாம்
தூரம் இருந்து பலவற்றை ரசித்திருந்தாலும்
தன்னோடு இந்த பட்டாம்பூச்சியை வைத்துக்கொள்ள ஆசை பட்டானாம்
முதல் பார்வையிலேயே அதன் மேல் ஆசை வர
பிடிக்க முயன்று தோற்றே போனானாம்
பின்ன என்ன, தினமும் வரப்புக்கே வந்தவன்
அந்த பட்டாம்பூச்சி எங்கெங்கு பறக்கும்? எந்த பூவின் வாசம் அழைக்கும் என
பொறுத்திருந்தே பார்த்தானாம்
இவன் இருப்பை அறிந்த பட்டாம்பூச்சியும் முதல் சில நாள் யோசித்தாலும்
இவன் தீங்கு செய்யவில்லை என்பதால் தன் வேலையை தொடர்ந்ததாம்
ஆனால் இந்த சிறுவனோ தக்க நேரத்திற்கு காத்திருக்கிறான் என்று அறியாமல்
மெல்ல அவனின் செய்கையில் மயங்கியதாம்
தான் எடுத்த தேனை ஜீரணித்து கொண்டே இவன் வரவையும் அறிந்ததாம் அந்த பட்டாம்பூச்சி
நேரமும் வந்தது போல அந்த சிறுவனுக்கு
பட்டாம்பூச்சியை முழுதாய் ரசித்திட ஒரு கண்ணாடி பாட்டிலில்
அருமையான ரோஜா பூவை ஏந்தினானாம்
இவன் மேல் இருந்த நம்பிக்கையும் பூவின் வாசமும் பட்டாம்பூச்சியை அழைக்க
மெல்ல வந்து அமர்ந்ததாம்
நொடிக்காக காத்திருந்தவன் பட்டாம்பூச்சி சிறகை விரிக்கும் முன்பே
சட்டெனெ அடைத்தானாம்
தான் ஏமாந்ததை உணர நினைக்கும் முன்னமே
அந்த பட்டாம்பூச்சியின் இடம் முதல் அதன் வட்டாரத்தை விட்டு விலக்கி
தனியே எடுத்து சென்றானாம் அந்த சிறுவன்
அதன் அழகில் மயங்கிய சிறுவனும்
தினமும் பத்திரமாக பாதுகாத்தானாம் ஒரு கூண்டுக்குள் வைத்து
பாவம் இவன் மேல் இருந்த நன்மதிப்பால் இவன் முன்னால் மட்டும் சந்தோசமாய்
சிறகடித்ததாம் பட்டாம்பூச்சி
எத்தனை நாள் தான் கூண்டுக்குளையே இருக்க?
மெல்ல வெளிய வர பட்டாம்பூச்சி முற்பட அப்பொழுது தான் தெரிந்ததாம்
அந்த சிறுவனின் மறுபக்கம்
கூண்டில் இருந்த வரை ரசித்த சிறுவன்
வெளி வர முயன்ற பட்டாம்பூச்சி சிறகை மெல்ல நெரித்தானம்
அவன் அழுத்தம் தாங்காத பட்டாம்பூச்சியும்
அவனிடம் சரணடைந்தே போனதாம்
மீண்டும் கூண்டுக்குள் அடைத்தாலும்
மெல்ல மெல்ல அந்த பட்டாம்பூச்சியை துன்புறுத்த ஆரம்பித்தானாம்
அந்த சிறுவன்
எவ்வளவு நாட்கள் தான் வலிகள் பொறுக்க?
அதிகாலை நேரம் வந்த சிறுவன்
அதின் இறக்கையை பிடித்து மேலே தூக்க
இது வரை வலிகள் தாங்கிய பட்டாம்பூச்சியும்
தனது பின் இறக்கைகளை உதிர்த்தே பறந்ததாம்
மீண்டும் ஓடினான்னாம் அந்த சிறுவன்
அவன் கைகள் காற்றோடு ஊசலாடியதாம்
சற்று சிரமம் இருந்தாலும் உயரத்தை நோக்கி பரந்த பட்டாம்பூச்சி
அவன் கைகள் படாத உயரம் பறக்க
தலை குனிந்தே போனானாம் நிமிர்ந்து பார்த்தே...
Written: Sam
Read: Nancy
Instagram: @kadhaiyakavithaiya
சின்ன வயசு நியாபகம்:
காலை துயிலுரிக்கும் நேரம் வர
காய்ச்சல் என செய்த பாசாங்கு
அன்று நடக்கும் சோதனை தேர்விலிருந்து காத்திருக்கும்
முதல் வகுப்பறை ஆரம்பிக்கும் நேரம் தாண்டியும்
ஆசிரியர் வராத ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் புரளிகள் புரண்டிருக்கும்
மதிய நேர உணவு எடுத்து சென்றாலும்
சத்துணவு முட்டை வாங்க
முதல் ஆளாய் ஓடிருப்போம்
selfie என்ற வார்த்தையே பரிட்சம் இல்லையென்றாலும்
பேப்பரில் செய்த புகைப்படக்கருவி, அதில் film என வைத்த துண்டு காகிதம்
அத்தனை முகங்களை பதித்திருக்கும்
கணக்கு வகுப்பில் bench தூக்க
காலையில் அடி வாங்கிய PET ஆசிரியரே அழைத்தாலும்
சந்தோசமாய் ஓடித்தான் போயிருப்போம்
கடைசி மணி அடிக்கும் நேரம் வருமுன்னமே
காலையில் திறந்த புத்தக மூட்டை, மொத்தமாய் மூடப்பட்டு
தோளில் ஏற தயார் ஆகியிருக்கும்
பேருந்தோ மிதிவண்டியோ
கூட்டத்தோடு கூட்டமாய் நாமும்,
மொத்தமாய் தான் குழுவாய் சென்றிருப்போம்
மாலை வீடு வாசல் வந்த நொடியே
செருப்பு ஒருபுறமும் பை ஒருபுறமும்
சட்டை ஒருபுறமும் அம்மா சத்தம் ஒருபுறமும்
மொத்தமும் புறம் தள்ளி போகுமுன்னே
பம்பரமும் கோலியும் கைகளில் சேர
நடுத்தெருவில் குழி வெட்டி கட்டம் போட
மொத்த கூட்டமும் வந்து விடும்
பந்தயமாக wwf கார்டும் குவிந்து விடும்
மணி 6 தொட துடிக்கும் முன்பே
டியூஷன் என்ற சத்தம் துரத்தும்
ஜெயித்த கார்டு அள்ளி போட்டு
வியர்த்த வேர்வையோடு முகம் கழுவி
சரியான நேரம் போய் அமர்த்திருப்போம்
டியூஷன் அக்கா அடியையும் தவிர்த்திருப்போம்
மனனம் செய்ய முக்கி முக்கி
சில நேரம் தலையும் வீங்க தட்டி தட்டி படிக்கும் பொழுது,
சட்டென்று போகும் மின்சாரம்
வாரி வழங்கும் சந்தோசத்தின் உச்சம் தான் கூச்சல்கள்
எல்லாம் முடிந்து இரவு உணவு உண்ண செல்ல
ஆச்சரியமாய் வீட்டில் வாங்கிய அந்த பரோட்டா
கண்களாலையே கவர்ந்து வசியம் செய்யும்
என்ன... முழுதாய் ரெண்டு முடிந்திருக்காது
பசியும் வயிறும் மறுத்திருக்கும்
அப்படியே போய் உறங்க
உடம்பெல்லாம் சோம்பல் முறித்து
மீண்டும் விடியும் அதே காலை...
Written: Sam
Read: Satheesh
Instagram: @kadhaiyakavithaiya
Instagram: @kadhaiyakavithaiya
Instagram: @kadhaiyakavithaiya
Instagram: @kadhaiyakavithaiya























